search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பினாமி முறை"

    சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் தங்களது முகமூடியாக, பினாமிமுறையில் குட்கா ஊழல் வழக்கில் மேல்முறையீடு செய்திருப்பதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். #MKStalin #gutkhascam
    சென்னை:

    திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குட்கா ஊழல் வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து, சுகாதாரத்துறையில் சுகாதார ஆய்வாளர் பதவியில் உள்ள ஊழியர் சிவக்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதுடன், மிக மூத்த வழக்கறிஞரான முன்னாள் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கியை அந்த வழக்கில் ஆஜராக ஏற்பாடு செய்திருப்பதும் மிகுந்த ஆச்சரியத்தையும் பலத்த சந்தேகத்தையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

    ஹெல்த் இன்ஸ்பெக்டராக இருக்கும் அரசு ஊழியர் ஒருவருக்கு இவ்வளவு பெரிய முதுநிலை வழக்கறிஞரை நியமிக்க எங்கிருந்து பணம் வந்தது என்ற நியாயமான கேள்வியும் அய்யப்பாடும் இயல்பாகவே எழுகிறது.

    இந்த ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஏற்கனவே “குட்கா டைரியில்” குற்றம் சாட்டப்பட்டிருப்பவர். அந்த டைரியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகக் காவல்துறை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன.

    குட்கா வழக்கு சி.பி.ஐ விசாரணைக்குச் சென்றால் சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் குட்கா வழக்கில் வசமாகச் சிக்கிக் கொள்ளநேரிடும் என்பதால், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட சி.பி.ஐ விசாரணையைத் தடுக்கவும், காலம்தாழ்த்தவும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் தங்களது “முகமூடியாக”, பினாமிமுறையில் பயன்படுத்தி, இந்த வழக்கினை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை என்பதை எவரும் எளிதில் புரிந்துகொள்ளமுடியும்.

    ஆகவே சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் அவர்களது பதவியில் எல்லா எதிர்ப்புகளையும் மீறி தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்வரை, குட்கா வழக்கு விசாரணைக்கு அனைத்துவகையான முட்டுக்கட்டைகளையும் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் வரிசையாகப் போட்டுக் கொண்டிருப்பார்கள்.

    எனவே இவர்கள் இருவரும் தங்கள் பதவியிலிருந்து தாமே முன்வந்து விலகிக்கொள்ள வேண்டும் அல்லது முதலமைச்சர் இந்த இருவரையும் பதவி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்பது அவசர அவசியமாகிறது.

    குறிப்பாக குட்கா வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிடப்பட்ட உடன், “வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம், மேல்முறையீடு செய்யமாட்டோம்” என்று அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அமைச்சர் ஜெயக்குமாரின் அந்தக் கருத்துக்கு மாறாக, இப்போது சுகாதாரத்துறையில் உள்ள ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்கிறார் என்றால், வளமானதும் வலிமையானதுமான பெரிய இடத்துப் பின்னணி இல்லாமல், அரசின் முடிவை எதிர்த்து அப்படியொரு நடவடிக்கை எடுக்க ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு எப்படி துணிச்சல் வரும்?

    ஆகவே இந்த மேல்முறையீட்டின் திரைமறைவில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரும், தமிழகக் காவல்துறை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனும் முக்காடு போட்டு ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதே பார்ப்போர் அனைவருக்கும் தெள்ளித் தெளிவாகத் தெரிகிறது.



    ஆகவே இந்த மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது “மேல்முறையீடு செய்யப் போவதில்லை” என்று தமிழக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட உறுதியான முடிவினைத் தெரிவித்து, குட்கா வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.

    அது மட்டுமின்றி முகுல் ரோகத்கி போன்ற மூத்த வழக்கறிஞரை நியமித்து தனக்காக வாதிட வைக்கும் அளவிற்கு, ஹெல்த் இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு எங்கிருந்து பணம் வந்தது என்பது பற்றி, லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மடியில் கனம் இருப்போர்க்கு வழியில் நிச்சயம் பயம் இருக்கும் என்றுதானே மக்கள் எண்ணிப்பார்ப்பார்கள்!

    இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #gutkhascam
    ×